Thursday, 22 August 2024

பாரதியாருக்கு எனது ஆழ்ந்த மரியாதை


       பாரதியாரும் நானும் 

சுப்ரமணிய பாரதியார் தமிழ் மக்களின் இதயத்தில் நிலையான இடம் பெற்ற வீர கவிஞர். அவரது கவிதைகள், என் வாழ்வின் பல்வேறு தருணங்களில் ஒலித்தவை. ஆங்கிலக் கவிகளில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஜான் கீட்ஸ் என்றால், பாரதியார் எனக்கு தமிழ் இலக்கியத்தில் அதே அளவு பிரியமானவர். அவர் எழுதிய வரிகள் என் மாணவ மற்றும் ஆசிரிய நாள்களில் நடந்த விவாதங்கள், உரையாடல்கள், மற்றும் சொற்பொழிவுகளில் முக்கிய பங்கு வகித்தன.

பாரதியார் பாடல்களில் எளிமையான ஆனால் ஆழமான கருத்துக்கள் அடங்கியுள்ளன. அவரது வரிகள் மக்களுக்குத் தைரியம் ஊட்டும் சக்தி கொண்டவை. அவர் தாயகப் பற்று, ஏழைகளுக்கான அக்கறை, சுதந்திரம், நீதி போன்ற பல்வேறு அம்சங்களைப் புகுத்தியுள்ளார்.

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லை" என்ற வரிகள் தைரியத்தின் சின்னமாக திகழ்கின்றன. "உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்; தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்; வயிர முடையநெஞ்சு வேணும்;" என்ற வரிகள் வாழ்க்கை நெறியாகும்.

"சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே" என்ற பாடல் குழந்தைகளின் மழலை மொழியையும், அவர்களின் பாசத்தையும் கொண்டாடும். "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்ற வரிகள் தமிழ் மொழி மேல் அன்பைத் தூண்டுகின்றன.

அவர், சுதந்திரம் என்பது வாழ்க்கையின் முக்கிய அம்சம் என்பதை உணர்த்துகிறார். "வந்தே மாதரம்" என்ற பாடல் நமது தேசிய பாட்டாக மாறியது ஆச்சரியமல்ல.

"புதுமை பெண்" என்ற சொற்றொடரை உருவாக்கியவர் பாரதியார். "பெண்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார். "ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி, இவ் வையம் தழைக்குமாம்"
என்ற வரிகள் பெண்களின் வலிமையை உணர்த்துகின்றன.

சாதி, மத பேதங்களை ஒழித்து, மனிதர் மனிதராய் வாழ வேண்டும் என்றார் பாரதியார். ஒரு முழுமையான தனிமனிதராக, எவ்விதத்திலும் ஒடுக்கப்படாதவராக, தனது எழுத்துக்களால் உயர்ந்தவர் அவர். அவரது ஒவ்வொரு வரியும் தமிழ் மக்களின் உள்ளங்களில் பசுமையாகக் கசிந்து, அவர்களின் வாழ்வில் முளைத்து விடுகிறது.

பாரதியாரின் கவிதைகள், அவரது உரைநடைகள், மற்றும் கருத்துக்கள் தமிழ்மக்களிடம் நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ளன. இன்றும் அவரை மேற்கோள் காட்டாத பேச்சாளர் எவரும் இல்லை.

"காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்" "குயிலின் பாட்டு - 1" . இதனை  "Out of the Cradle Endlessly Rocking" வரும் Walt Whitman இன்
"Lisp’d to me the low and delicious word death,
And again death, death, death, death,"
என்ற வரிகளோடு சேர்த்துப் பார்த்து, ஆசிரியையின் கவனத்தை, ஒரு மாணவியாக ஈர்த்தது, இப்போது என்  நினைவிற்கு வருகிறது.

பாரதியார், தனது வரிகளால் பல தலைமுறைகளுக்கு நினைவாக இருப்பார் என்பது ஒரு மாபெரும் உண்மை.



No comments:

Post a Comment