எபனேஸர்... அழகிய பெயர். "பெரிய மாமா" என்று நாங்கள் அழைப்போம். ஆம் - அவர் உண்மையிலேயே பெரியவர்- உருவத்தில், குணத்தில், கம்பீரத்தில். கம்பீரக் குரல்! கம்பீர நடை! கம்பீரத் தோரணை!
இள வயதில், மெருகுடன், வண்ண வண்ண சட்டைகள் அணிந்து (நைலானில் கூட), சைக்கிளில் வலம் வருவது தனி அழகு.
"நூலைப் போல சேலை". அப்பா நல்ல தம்பியைப் போலவே, பல்வேறு தொழில்கள் முயன்றும், எதிலும் உச்சம் எட்டவில்லை. பாப்பா ஸவுன்ட்ஸ் - ஒலி பெருக்கிகளும் தோசைக்கல் ரெக்கார்டுகளும, ஓரிரு வருடங்களுக்குப் பின் மச்சு வீட்டில் ஒதுக்கப்பட்டன. பிறகு, ஜான்ஸி டுட்டோரியல்ஸ். ஒரு அறிவு நிறை ப்ரின்ஸிபலின் கீழ் சிறப்பாக இயங்கிற்று- சில வருடங்கள் மட்டுமே. நிறைவாக, தன் கீழ் பணியாளர்களை வைத்து பணிபுரியும் ஆற்றல் மிக்க Electrician. குருசடியில் எங்கள் வீட்டில் அவரது கைவண்ணத்தைக் காணலாம்.
வயது சற்றே ஏறினப்பின் தான் திருமணம். மணக்கோலத்தில் மட்டுமே full suitல் பார்த்த ஞாபகம். எப்போதுமே மாமா வெள்ளை வேடடியில் தான். தக்காளி பழம் போன்ற அழகிய மனைவி அமைய, குடும்பம் விரிவடைந்தது. ஸுரேஷ், ஜீவா, ஜிஜி - மூன்று பிள்ளைகளையும் பண்பும் பாசமும் ஊட்டி வளர்த்தார் - திருமணத்திற்கு முன் எங்கள் மூவரையும் வளர்த்தது போல. மூவரான நாங்கள் ஓலைப்பள்ளியிலும் ஓய்வு நாள் பள்ளியிலும் பக்திமுயற்சி சங்கத்திலும் எல். எம். எஸ் பள்ளியிலும ஏதோ படித்தோம் என்றால் சித்தியும் மாமாவும் தான் காரணம்.
கோயிலில் டீக்கனார். கோயிலின் ஒவ்வொரு கல்லும் மாமாவின் கதை பேசும். கோயில் பளிச்சென்று சுத்தமாக இருக்க வேண்டும் என்பது மாமாவின் ஆதங்கம். Choirல் எழுந்து நின்று, கம்பீரக் குரலில் பாடுவார். எல்லா நிகழ்வுகளிலும் பங்கு பெறுவார், மகன் சுரேஷ் இன்று செய்வதைப் போல.
சட்டென வந்த மாமாவின் மரணம் ஒரு நிகழ்ச்சி. கட்டிலில் சாய்ந்த படி, மலர்ந்த முகத்தோடு, மகளின் தோழியரிடம் பேசிக் கொண்டிருந்த ்போது இதயம் துடிக்க மறந்தது. புன்னகை மட்டும் மாறவில்லை.
ஒரு சகாப்தம் முடிந்து விட்டது. எங்களுக்கு செய்தி வந்தது. மர்மமான முறையில், எங்கள் வீட்டிலிருந்து போன மின்சாரம், நல்லடக்கம் முடிந்து நாங்கள் திரும்பி, தானாகவே கழன்றிருந்த ஃப்யூஸை சரி செய்த பின்னரே, மீண்டும் வந்தது.
அடக்க ஜெபம்; வீட்டிற்குள்ளேயும் வெளியிலும் பெருங்கூட்டம்- கோயில் நிரம்பி வழிவதைப் போல. ஆயரின் உரையில் ஒருபகுதி, இன்றும் நினைவில். "சோகத்தில் மூழ்கிய முகங்கள் நடுவே, ஒரே ஒரு முகம் மட்டும் சிரித்துக் கொண்டே இருக்கிறது. பார்க்க தவறி விடாதீர்கள்," என்றார் போதகர். மாமாவின் முகம் புன்னகையில் மலர்ந்திருந்ததென்பது முழுமையான உண்மை.
ஜூடி- ஜான்ஸி - பாப்பா... மூவருக்கும் ஒவ்வொரு மாமா என்று உரிமை கொண்டாடுவது வழக்கம். ஜூடி அக்காவுக்கு பென்னட் மாமா; ஜான்ஸி அக்காவுக்கு கடாட்சம் மாமா; எனக்குத் தான் "கண்ணையா..." என்று எல்லோரும் செல்லமாக அழைக்கும் பெரிய மாமா.


மிக அருமையான பதிவு.தன் மருமகள்களின் பெயர்களில் தொழில் தொடங்கிய அபூர்வமான மாமனார்.
ReplyDelete