Tuesday, 21 April 2020

From my diary - Golden Memories

PAATI par excellence


படுத்தால் உறக்கம் - இது தான் இது வரை நான். ஏனோ, இப்போதெல்லாம் படுக்க முடியவில்லை; படுத்தால் எளிதில் உறங்க முடியவில்லை. நேரம் டிக் டிக் என்று பறப்பதை டீஜிட்டல் கடிகாரத்தில் பார்த்துக் கொண்டிருக்கும்போதெல்லாம் என் எண்ண அலைகளில் மிதந்து வருவது ஒரு அன்பு தேவதை.
படிப்பைத் தேடி, மூணாரிலிருந்து மார்த்தாண்டம், பின்னர் பல்வேறு காரணங்களால் நாகர்கோவில் என இடம் பெயர்ந்த பின்னரும் ஒவ்வொரு பரிட்சைக்கு முன்னரும் ஜெபம் பண்ண வேண்டும் என்று நானும் என் இரு அக்காமாரும் அந்த தேவதையின் இறுதி மூச்சு நெருங்கும் வரை தேடி ஓடுவது வழக்கம். "காப்பார் காப்பார், காத்தவர் காப்பார் இனிமேலும்..." என்று தளர்ந்த குரலில் பாடி ஜெபித்ததை நினைவில் கொண்டே, அதற்கு பின்னும் பல பரிட்சைகள் எழுதியிருக்கிறேன்.

நெருக்கடி இல்லாத மெயின் ரோட்டின் அருகில், 30-40 ஸென்டில் பெரிய இடம்; நடுவில் கம்பீரமாக ஒரு வீடு - ஆயினி விளை புத்தன் வீடு. தற்போது, நான்கு வீடுகள், கடைகள் என நெருக்கடி. மெயின் ரோட்டைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். ஏனோ, இன்றும் பல வேளைகளில் என் முன் அந்த வீடு வந்து போகிறது. வீட்டின் கடைசி அறையாக ஒரு பெரிய கிச்சன் - அந்த அடுக்களையை குஸினி என்று சொல்லியே பழக்கம். அந்த தேவதையைப் பார்த்ததெல்லாம் அதிகம் இந்த குஸினியில் தான்.

வளரும்பருவத்தில் ஆறு ஆண்டுகளில்- நீண்ட கோடைகால விடுமுறைகள் தவிர்த்து- அந்த வீட்டில், குறிப்பாக குஸினியில் பல மறக்கவே முடியாத நல்ல அனுபவங்கள். அத்தனையும் பசுமை நிறைந்த நினைவுகளாக மாறிவிட்டன.

சரி, அந்த தேவதை யாரென்று சொல்லி விடுகிறேன்... அன்புக்கு இலக்கணமான அவர் என் அம்மாவை ஈன்ற தாய் - எங்கள் இனிய பாட்டி.
பாட்டியிடம் நான் கற்றவை ஏராளம். முன்னமொரு காலத்தில் பைபிள் உமணாக இருந்தார்களாம். விளையாட்டாக அவர்கள் சொல்லிய பைபிள் கதைகள் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்தவை. அவைத் தான், எழுத பழகுமுன்னரே ஞாயிறு பாடசாலையில் கேட்ட கேள்விகள் அத்தனைக்கும் சரியாக பதில் கூறி, பிஞ்சு பருவத்திலேயே டையஸிஸ் ஒருவருக்கு ஒருமுறையே வழங்கும் பைபிளை பரிசாக எனக்கு பெற்றுத்தந்தது, நிச்சயமாக நான் இதை தற்புகழ்ச்சிக்காக எழுதவில்லை. பாட்டியிடம் உள்ள நன்றி உணர்வோடு மட்டுமே இதை எழுதுகிறேன்.

தினமும் காலை என் கண்களில் பட்டவை பாட்டி கிச்சன் திண்டின் பக்கம், மூன்று வாய் விறகு அடுப்பின் முன் நின்று, புன்னகை பூக்கும் வதனத்துடன் எங்களுக்காக உணவு தயாரிப்பது தான். திருமணம் வரை சித்தியும் சேர்ந்து வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
படிப்பதற்காக, பாட்டியை நாடி வந்த பேத்திகள் நாங்கள் முவர். வாலிபர்களாக மூன்று மாமன்மார்கள். மிக்ஸி, கிரைண்டர் இல்லாத காலத்தில் உரலில் இடித்து, மாவு ஆட்டி, அம்மியில் அரைத்து- அப்பப்பா, எப்படித்தான் சிரித்த முகத்துடன் அத்தனை பேரையும் கவனித்தார்களோ... நினைக்கவே ஆச்சரியம் பொங்குகிறது.

மூன்று பேத்திகளுக்கும் மூன்று வேலைகள் என விதித்திருந்தார் - வீட்டை சுத்தம் செய்வது, முற்றம் தூப்பது, பாத்திரங்கள் தேய்ப்பது. அவை ஒவ்வொரு வாரமும் மாறி மாறி வரும். காலையில் ஓடிஓடி ஆற்றிற்கு சென்று, நீந்தி குளித்து விட்டு வீட்டிற்கு வந்த உடன், சுடச்சுட புட்டும் அதனுடன் பத்து பைசாவுக்கு வாங்கிய வாழைப் பழங்களும், ஆவி பறக்கும் கருப்புக்கட்டி காப்பியும் காத்திருக்கும். சாப்பிட மறுத்து, சாக்குபோக்கு சொல்ல மூத்த பேத்தி. சாப்பிடாவிட்டால் பாட்டி படும் பாடு இருக்கிறதே. . இன்னும் மறக்க முடியவில்லை.

காலை நீட்டி தரையில் உட்கார்ந்து, அம்மியில் அரைக்கும் போது, நாங்கள் அருகில் நின்றால் போதும் - சிரித்து சிரித்து பாட்டி சொன்ன விடுகதைகளை நினைவில் கொண்டு வந்தால், இப்போதும் சிரிப்பு வருகிறது. உணர்ச்சி பொங்க பாடிய பாடல்களை இன்றும் மகிழ்ச்சி பொங்க பாட முடிகிறது.

மைலாடியிலிருந்து திருமணமாகி மார்த்தாண்டம் வந்த போது, பாட்டியும் தாத்தாவும் பல்லாக்கில் வந்ததாக கூற கேட்டிருக்கிறோம். தாத்தாவைப் பார்க்க எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. ஆனால், தாத்தா நிறைய சொத்துக்கு சொந்தக்காரர் என்றும், தேவை ஏறபட்ட போதெல்லாம் இடங்களை விற்று விட்டார் என்றும், மிஞ்சியது தான் நான் முன்பே சொன்ன அந்த இடமும் வீடும் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். பாட்டியின் குடும்பம் மைலாடியில் பேரும் புகழும் பெற்ற குடும்பம். இவை எதையும் பாட்டி பேசியதும் இல்லை; பெருமை பாராட்டியதுமில்லை. தாழ்மையுடனிருப்பது எப்படி என்று பாட்டியிடம் தான் கற்றுக்கொண்டோம்.

நானும் ஒரு அக்காவும் YWCA ஹாஸ்டல், டதிஸ்கூல் போர்டிங் என்று மாற வேண்டியிருந்தது. டதி போர்டிங்கில் தங்கி இருந்த நாட்களில், போதாநேரம், என் பாதத்தில் வந்த புண் ஒன்று வேதனை தர, சிகிச்சை பெற்று வரக்கூறி அருகில் இருந்த இன்னொரு பாட்டி வீட்டிற்கு அனுப்பப்பட்டேன். இந்த பாட்டி வீட்டிலோ அறைகளிலெல்லாம் நெல் பரப்பப்பட்டிருந்தது. பாவம், புண்ணைப் பார்த்த பாட்டிக்கோ கொமட்டி விட்டது. சென்று விடு, மகளே, சென்று விடு என்று அனுப்பி வைக்க, நானும் வெகு தூரம் நடந்தும், பஸ்ஸில் ஏறியும் பாட்டியிடம் வந்து விட்டேன். புண்ணுடன் என்னைப் பார்த்த பாட்டி துடித்துப்போனார். அள்ளி அணைத்து, அவர் வடித்தக் கண்ணீரை எப்படி மறக்க இயலும்? ஒரே வாரத்தில் நல்ல நலம் பெற்று, நான் விடுதி திரும்பும் போது மகிழ்ச்சியையும் அன்பையும் அவர் முகத்தில் கண்டேன். இன்றுபோல் விதவிதமாக போட்டோக்கள் இல்லை தான். ஆனால், அந்த அன்பு முகம் என் மனதில் நிரந்தரமாய்!

பாட்டி என்றுமே யாரிடமும் சண்டையி ட்டதில்லை. எதற்கும் குறைகூறியதுமில்லை. தளராமல் வேலை செய்வதில் சளைககவே மாட்டார். ஒரு கிறிஸ்துமஸ். எங்களுக்கு படு கொண்டாட்டம். திடீரென பாட்டி இரத்த வாந்தி எடுத்ததால் நெய்யூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சுகம் பெற்று, மீண்டும் பணிபுரிய வந்து விட்டார். இரத்த வாந்தி என்றால் என்ன பாடு பட்டிருப்பார்? அந்த இரவிலும், நெருப்புச்சூட்டில், எங்களுக்காக அச்சுமுறுக்கு செய்து கொண்டிருந்தார் என்பது தான் என்னால் நம்ப முடியாத ஆச்சரியம்.

பாட்டியை மறக்கவே முடியாது. பல மாதங்கள் படுக்கையிலிருந்த பாட்டியை முகங்கோணாது கவனித்த, பாட்டியின் இளைய மருமகளையும் மறக்க முடியாது. மார்த்தாண்டம் வீட்டில் எங்களை வளர்த்த சித்தியும் மாமன்மார் மூவரும் அவரது துணைவியரும் பல்வேறு காரணங்களால் பெருமைக்குரியவரே. அவர்களைக் குறித்தும் எழுத வேண்டும்.

நன்றி மறப்பது நன்றன்று.

என்றும் நன்றியுடன்,
நான்

18.04.2020

No comments:

Post a Comment